internet

img

ஏன் நீட் நீட் என்று அதை ஒரு பெரிய பிரச்சினையாகச் சொல்கிறீர்கள்?

கேள்வி: ஏன் நீட் நீட் என்று அதை ஒரு பெரிய பிரச்சினையாகச் சொல்கிறீர்கள்? வெறும் 3000 மெடிக்கல் சீட் தான் தமிழகத்தின் பிரச்சினையா?

பதில்:

நீட் இல்லா உலகில்,

அனிதா MBBS படித்தால் அவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிக்குச் சேர்வார்.

3 ஆண்டு PHCயில் வேலை பார்த்து கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் பார்ப்பார்.

பிறகு, அரசு மருத்துவர்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வார்.

சிறப்பு மருத்துவரான பின் அரியலூர் GHல் சேர்வார்.

நல்ல மருத்துவர்கள் இருப்பதால், தமிழகத்தின் 70% ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி இலவசமாக சிகிச்சை, மருந்துகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

வசதி படைத்தவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

நீட் உள்ள உலகில்,

பல லட்சம் செலவு செய்து பல ஆண்டு நீட் தேர்வுக்குப் படித்த நகர்புற CBSE மாணவர்கள்

MBBS முடித்த பிறகு

PG-NEET படிக்கச் சில லட்சங்களைச் செலவு செய்து கொண்டிருப்பார்கள்.

முதுகலை படித்து முடித்த பிறகு, போட்ட காசை எடுக்க தனியார் மருத்துவமனைகளில் சேர்வார்கள். வெளிநாட்டுக்குப் பறப்பார்கள்.

அரசு மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இப்போதே மற்ற மாநிலங்களில் இது தான் நிலை.

எனவே, அரசுக்கு மருத்துவம் பார்க்கத் தெரியவில்லை என்று அரசு மருத்துவக் கட்டமைப்பைத் தனியாருக்குத் தாரை வார்ப்பார்கள்.

பொது சுகாதாரத் துறை முழுக்க தனியார் பெரு மருத்துவமனைகளிடம் போகும். இன்சூரன்ஸ் கம்பெனிகள் வைத்ததே சட்டம் ஆகும்.

மருத்துவத்தின் விலை உயரும்.

ஏழைகள், நடுத்தர மக்கள் சாவார்கள்.

காசு இருந்தாலும் உங்களுக்குத் தனியாரில் உடனே Appointment கிடைக்காது.

நீங்கள் வெளிநாட்டுக்குப் போய் தான் அவசரத் தேவைக்கு மருத்துவம் பார்க்க வேண்டி வரும்.

அப்படித் தான் இப்போது வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு மருத்துவம் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசு மருத்துவக் கட்டமைப்பு இல்லாமல் காலரா, டெங்கு, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்றே அரசுக்குத் தெரியாது.

நாடு சுடுகாடாகும்.

நீட் என்பதை யாரோ ஒரு படிப்பாளி பிள்ளைக்கு வந்த பிரச்சினை தானே என்று நினைக்காதீர்கள்!

அது தமிழ்நாட்டின் மீது வீசப்பட்ட அணுகுண்டு!

Ravishankar Ayyakannu

;